History of Church தோற்றமும்.. வளர்ச்சியும்...

திரியேக தேவனின் திருவருளால் 1968ஆம் ஆண்டு மூவரசன்பேட்டை பகுதியில் குடியேறிய கிறிஸ்துவக் குடும்பத்தினர், Dr.D.ராபர்ட் மாசில்லாமணி அவர்கள் இல்லத்தில் கூடி இல்ல ஜெபக்குழு ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் காலை, மாலை ஆராதனை நடைபெற்றன. இவ்வாராதனைகளை திரு.துரைராஜ் (தாசில்தார்) அவர்கள் நடத்தி தந்தார்கள்.

இந்த ஜெபக்குழுவின் ஆர்வத்தையும், பக்தியையும் கண்ட தேவன் இதனை மேலும் உயர்த்த சித்தமானார். அதன்படி மீனம்பாக்கம் St.Peter’s Churchஐ சார்ந்த குழு ஒன்று நம் ஜெபக்குழுவை சந்தித்து ஓர் ஆலயம் கட்ட ஊக்குவித்தனர். அச்சமயம் மீனம்பாக்கம் சபை குருவானவராக இருந்த பேராயர் சுந்தர் கிளார்க் 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஜெபக்குழுவிற்கு வந்து ஜெபித்து ஆசி கூறி ஊக்குவித்துச் சென்றார்கள்.

1968ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜெபக்குழு, ஜெபவீடாக மாற்றப்பட்டு பூரண ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் ஓழுங்குடன் செயல்பட ஆரம்பித்தது. அச்சமயம் மேற்படி ஜெப வீட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 குடும்பங்கள் மட்டுமே. அக்காலத்து மாதக் காணிக்கை சுமார் ரூ.5 முதல் 8 ரூபாய் ஆகும்.

1973ஆம் ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளியின் நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்ட பேராயர் நியுபிகின் அவர்கள், சபை மக்களை ஊக்குவித்து கூடிய சீக்கிரம் இந்த பகுதியில் ஒரு பெரிய ஆலயம் எழும்பும் என்று ஆசி கூறிச் சென்றார்கள்.
காலம் செல்லச் செல்லக் கர்த்தரின் அருள் சபையை வளரச் செய்தது. சபை அங்கத்தினர் 20ஆக உயர்ந்தது. சபைக்கு தேவ ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு 4½ கிரவுண்டு நிலம் சுமார் பதினைந்தாயிரம் (Rs.15,000/-) ரூபாயில் சென்னை பேராயத்தால் வாங்கித் தரப்பட்டது.

11.01.1976 ஆம் ஆண்டு சுமார் Rs.3000/- (மூவாயிரம்) செலவில் தற்காலிகக் கூறையுடன் ஓர் சிறு ஆலயம் கட்டப்பட்டு, பேராயர் அருட்திரு சுந்தர் கிளார்க் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினமே பெரிய ஆலயம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

நமது சபை முதலில் பல்லாவரம் குருசேகரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் மீனம்பாக்கம் குருசேகரம் 1974ல் உருவானபோது, மீனம்பாக்கம் குருசேகரத்துடன் இணைக்கப்பட்டது. முதலில் பல்லாவரம் குருசேகரத்திற்கும், பின்னர் மீனம்பாக்கம் குருசேகரத்திற்கும் செலுத்தப்பட வேண்டிய காணிக்கைகள் தவறாமல் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி வளர வளர நமது ஆலய உறுப்பினர்களின் எண்ணிக்கைகளும் 80ஆக உயர்ந்தது. பெரிய ஆலயம் கட்டப்பட அவசியம் ஏற்பட்டதினால் 50 அடி நீளம், 35 அடி அகலத்தில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. 1983ல் பேராயத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பெரிய ஆலய கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

சபையாரின் வளர்ச்சி பெருகினதினாலும், தனித்தியங்க வேண்டிய சூழ்நிலையும், அதற்கான ஆசீர்வாதமும் தோன்றினதினால் 1985ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி, பேராயத்தால் நமது ஆலயத்திற்கு யூனிட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அப்போதைய மாதக் காணிக்கை ரூ.750/- ஆகும்.

ஆலய கட்டுமான தேவைகளுக்காக ஒவ்வொரு ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் ஆலயத்தின் திறந்த வெளியில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஒன்றாகக் கூடி ஜெபித்தனர். திரு.செல்வசாமிதாஸ் முயற்சியால் எபேசியர் 6:18 வசனத்தின்படி சகலவித வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் செய்து பண உதவியும், பொருள் உதவியும் தேவனிடத்திலிருந்து பெற்று, ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிக்க தேவன் உதவினார்.

24.12.1987ஆம் ஆண்டு புதிய ஆலயம், பேராயர் வரமுடியாத காரணத்தால், பேராயர் சாப்ளின் ஆக இருந்த அருட்திரு பக்தன் தியாபிளஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
1993ஆம் ஆண்டு மணிக் கூண்டு கட்டப்பட்டது. நம் சபையின் போதகர் இல்லம் கட்ட பேராயர் சுந்தர் கிளார்க் தன்னுடைய நிலத்தை நன்கொடையாக வழங்கினார்கள்.

பேராயர் தேவசகாயம் அவர்களால் 17.10.1999 அன்று குருமனைக்கு அடிக்கல் நாட்டப்பெற்று, 12.06.2003 அன்று குருமனை பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.

2001ஆம் ஆண்டு அருகில் உள்ள நிலம் சபைக்கு வாங்கப்பட்டது. 26.06.2005 அன்று Parish Hall மற்றும் Sexton Quarters பேராயர் தேவசகாயம் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பேராய கவுன்சிலில் யூனிட்டாக நமது சபை குருசேகரமாக (Pastorate) உயர்த்தப்பட்டது. இம்மட்டும் நடத்தின தேவன் நம்மை வருங்காலங்களில் நன்மையான பாதையில் வழிநடத்துவாராக! அல்லேலூயா! ஆமென்.. ஆமென்…